Asianet News TamilAsianet News Tamil

ஆட்டநாயகனுக்கான பரிசுத்தொகை செக்கை குப்பையில் வீசிய ஜடேஜா!! சர்ச்சையில் சிக்கிய ஜட்டு.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ..?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, பரிசுத்தொகை குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட அட்டையை குப்பையில் வீசியெறிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 

jadeja throws man of the match cheque to garbage
Author
India, First Published Nov 12, 2018, 4:47 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, பரிசுத்தொகை குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட அட்டையை குப்பையில் வீசியெறிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களையும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

ஆட்டநாயகன் விருதுடன் அந்த விருதை வெல்லும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த தொகை அனைவருக்கும் தெரியும் பட்சத்தில் தொகை குறிப்பிடப்பட்ட பெரிய அட்டை வீரர்களுக்கு வழங்கப்படும். அது வெறும் அட்டை மட்டும்தான். அந்த தொகை கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக வீரர்களை சென்றடைந்துவிடும். 

எனவே அந்த தொகை குறிப்பிட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அட்டை தேவையில்லாத பொருள்தான். இதுவரை அந்த அட்டையை விருதை வென்ற வீரர்கள் என்ன செய்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஜடேஜா அதை தூக்கி எறிந்துள்ளார். 

jadeja throws man of the match cheque to garbage

அந்த அட்டையை திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெயன் என்னும் துப்புரவு தொழிலாளி கண்டெடுத்துள்ளார். இதையடுத்து ”ப்ரக்ருதி” என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் 5-வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா தனது கையால் வாங்கிய ஆட்டநாயகனுக்கான விளம்பர அட்டையைக் குப்பைகளை அகற்றும் ஜெயன் என்பவர் வைத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்துடன் சில கேள்விகளும், யோசனைகளும் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதில், போட்டியில் சிறப்பாக ஆடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனுக்கான பரிசுத்தொகை விளம்பரத்துக்காக பிளாஸ்டிக் அட்டையில் காண்பிக்கப்படுகிறது. இதற்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று வழியை பிசிசிஐ யோசிக்கலாமே? தற்போது அந்த விருது ஜெயன் என்ற திருவனந்தபுரம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளரிடம் உள்ளது. போட்டிக்குப் பிறகு, குப்பைகளை அள்ளும்போது அவருக்கு இது கிடைத்திருக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் பதிவில், பிசிசிஐ, கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, கேரளா கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பலரை டேக் செய்துள்ளனர். இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டதால் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிசிசிஐ மாற்று வழியில் வீரர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios