ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் நிலைத்துவிட்டால் பின்னர் அவர்களை கட்டுப்படுத்துவதும் வீழ்த்துவதும் கடினம் என ஜடேஜா தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 323 ரன்கள் என்ற கடின இலக்கை ரோஹித் சர்மா - கோலி ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 42 ஓவரிலேயே எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

தவான் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களில் அவுட்டான போதும், ரோஹித்தும் கோலியும் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். களமிறங்கியது முதலே கோலி அடித்து ஆட, ரோஹித் வழக்கம்போல களத்தில் நிலைக்கும் வரை நிதானமாக ஆடினார். ரோஹித் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் அதன்பிறகு அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதிரணி அறிந்த விஷயம்தான். ஆனாலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. விக்கெட்டுக்கான வாய்ப்பே கொடுக்காமல் இருவருமே அபாரமாக ஆடினர். 

கோலி 140 ரன்கள் எடுத்து அவுட்டாக, ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தனிப்பட்ட முறையும் பார்ட்னர்ஷிப்பாகவும் இருவரும் பல சாதனைகளை வாரி குவித்தனர்.

இந்நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரோஹித்தும் கோலியும் களத்தில் நிலைத்துவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவதும் வீழ்த்துவதும் கடினம். அவர்கள் நிலைத்து நின்ற பிறகு அவர்களுக்கு பந்துவீசுவது என்பது கடினமான விஷயம். இருவருமே முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினர். அவர்கள் விக்கெட்டிற்கு வாய்ப்பே கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடி வெற்றியை பெற்றுக்கொடுத்தனர் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.