வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயரை ரன் அவுட் செய்த விதம் குறித்து ஜடேஜா மனம்திறந்துள்ளார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான இன்று பால் 47 ரன்களிலும் சேஸ் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து லீவிஸும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நேற்றைய இன்னிங்ஸில் இளம் வீரர் ஹெட்மயரை ஜடேஜா ரன் அவுட்டாக்கிய விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அஷ்வின் வீசிய 12வது ஓவரின் 5வது பந்தை ஹெட்மயர் மிட் ஆன் திசையில் அடிக்க, அந்த பந்தை ஜடேஜா பிடித்துவிட்டார். அதற்கு ரன் எடுக்க முயன்றபோது, மறுமுனையில் இருந்த அம்பிரிஷ் வேகமாக ஓட பாதியில் ஹெட்மயர் மறுத்துவிட்டார். பாதி பிட்ச்சை தாண்டி ஓடிவிட்டதால் பேட்டிங் முனையை நோக்கி அம்பிரிஷ் ஓட, ஹெட்மயரும் பேட்டிங் முனையை அடைய முயன்றார். இருவருமே பேட்டிங் முனையில் இருந்தனர். ஆனால் தனக்கு முன் அம்பிரிஷ் பேட்டிங் கிரீஸை அடைந்துவிட்டதால், மீண்டும் மறுமுனைக்கு ஓட முயன்றார் ஹெட்மயர். 

இதற்கிடையே இருவரும் ஒரு முனையில் இருந்ததால் அசால்ட்டாக பந்தை எடுத்துக்கொண்டு வந்தார் ஜடேஜா. ஸ்டம்பிற்கு அருகே நின்ற அஷ்வின் தன்னிடம் பந்தை தூக்கிப்போடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஜடேஜா அவ்வாறு செய்யாமல் அசால்ட்டாக வந்தார். அதைக்கண்ட ஹெட்மயர் வேகமாக ஓடிவந்தார். கடைசி நேரத்தில் ஹெட்மயர் கிரீஸிடம் வருகையில் ஸ்டம்பில் பந்தை போட்டு ஜடேஜா ரன் அவுட் செய்தார். 

ஒருவேளை கடைசி நேரத்தில் பந்து ஸ்டம்பில் சரியாக படாமல் போயிருந்தால், அவர்களை வைத்து நகைச்சுவை செய்ய விரும்பிய ஜடேஜாவின் செயலால் இந்திய அணி நகைப்புக்கு ஆளாகியிருக்கும். ஜடேஜாவின் செயலை கண்டு அஷ்வின் அதிர்ந்துபோனார். அந்த அதிர்ச்சியில் இருந்து சில நிமிடங்கள் கழித்துத்தான் அஷ்வின் வெளிவந்தார். கோலியும் ஜடேஜாவிடம், பந்து ஸ்டம்பில் படாமல் போயிருந்தால் என்ன செய்வது? என்பதுபோல அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

நேற்றைய ஆட்டம் முடிந்ததும் இதுகுறித்து விளக்கமளித்த ஜடேஜா, இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒருமுனையில் இருந்தனர். அதனால் ஸ்டம்பிற்கு அருகே சென்று எளிதாக ரன் அவுட் செய்து விடலாம் என நினைத்து ஸ்டம்பை நோக்கி நடந்து சென்றேன். ஆனால் ஹெட்மயர் மீண்டும் ஓடிவருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை நான் ஸ்டம்பில் சரியாக அடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் நான் த்ரோ செய்தேன்; அதிர்ஷ்டவசமாக பந்து ஸ்டம்பில் பட்டது என்று ஜடேஜா தெரிவித்தார்.