Italian Open tennis Rafael Nadal wins champion for 8th time
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, மகளிர் பிரிவில் விட்டோலினா நேர் செட்களில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஹலேப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நடாலும், நடப்புச் சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவும் மோதினர். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் நடால் எளிதாக வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் 6-1 என வெரேவ் அதிரடியாக ஆடி வென்றார்.
இதனால் கடைசி செட்டில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இடையில் மழை பெய்த போது, 1-3 என்ற புள்ளிக்கணக்கில் நடால் பின்தங்கி இருந்தார். மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் நடால் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தி 6-3 என செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் இத்தாலி ஓபன் போட்டியில் அவர் 8-வது முறையாக வென்றுள்ளார். உலகின் முதல்நிலை வீரராக இருந்த நடால், பார்சிலோனா ஓபன், போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ஏடிபி தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ரோஜர் பெடரர் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் சாம்பியன் வென்றதன்மூலம் மீண்டும் முதலிடத்தை அடைந்துள்ளார் நடால்.
