IsL update Second win for Chennai

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 15-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி புணே சிட்டி அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை தொட்டது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 15-வது ஆட்டம் புணே நகரில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் ஹென்ரிக் செரீனோ கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சென்னை - புணே அணிகள் ஒன்றுக்கொன்று சவாலளிக்கும் விதத்தில் விளையாடின. இரு அணிகளின் பின்கள வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியதால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் கோல் இன்றி தொடர்ந்த ஆட்டத்துக்கு 82-ஆவது நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் சென்னை கேப்டன் ஹென்ரிக் செரீனோ. அணியின் சக வீரர் அடித்த பந்தை மிகச் சரியான தருணத்தில் பாய்ந்து, மிகத் துல்லியமாக தலையால் முட்டி அவர் கோலடித்தார்.

இதனால் கடைசி நேரத்தில் சென்னை 1-0 என முன்னிலை பெற்று புணேவுக்கு நெருக்கடி கொடுத்தது. எஞ்சிய நேரத்தில் எவ்வளவு முயன்றும், சென்னையின் தடுப்பை தாண்டி புணேவால் தனது கோல் வாய்ப்பை எட்ட இயலவில்லை. இதனால் இறுதியில் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.