ISL update pune Taking victory over Kolkata

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 4-1 என்ற கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் ஒன்பதாவது ஆட்டம் எஃப்சி புணே சிட்டி அணி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையே நடைப்பெற்றது.

இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் புணே அணியின் எமிலியானோ அல்ஃபாரோவின் உதவியுடன் மார்செலோ பெரெய்ரா கோலடித்து முதல் கோல் வாய்ப்பை பெற்றார்.

பின்னர், 28-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஸகின்ஹாவின் கோல் முயற்சியை தடுத்த புணே கோல் கீப்பர், அடுத்தடுத்த கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு தடுத்த வீரர்கள் தங்களது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக முதல் பாதி நிறைவில் புணே 1-0 என முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைப்பெற்ற 2-வது பாதி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கொல்கத்தா தனது கணக்கைத் தொடங்கியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் விபின் சிங். இதனால் ஆட்டம் சமன் ஆனது.

ஆனால், அதற்கான பதிலடியாக, அடுத்த நிமிடத்திலேயே புணே வீரர் ரோஹித் குமார் ஒரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். சகவீரர் பெரெய்ரா அடித்த கார்னர் கிக்கை, தலையால் முட்டி அவர் கோலடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மார்செலோ பெரெய்ரா மீண்டும் ஒரு கோல் அடிக்க, புணே 3-1 என முன்னிலை பெற்றது. 80-ஆவது நிமிடத்தில் புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஒரு கோல் அடித்து அணியை மேலும் பலம் பெறச் செய்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் அந்த அணி 1-4 என்ற கணக்கில் தோற்றது.