சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் வீரர் இஷான் கிஷான் சதமடித்து தனது அணியை அபார வெற்றி பெற செய்தார். 

ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. 

169 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ஆனந்த் சிங் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 104 ரன்களை சேர்த்தது. ஆனந்த் சிங் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 

ஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 55 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் சதம் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 17வது ஓவரிலேயே எளிதாக இலக்கை எட்டி ஜார்கண்ட் அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் இஷான் கிஷான், ஐபிஎல்லுக்கு முன் அபாரமாக ஆடியிருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும்.