இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், தோனியையே மிஞ்சும் அளவுக்கு ஸ்டம்பிங் ஒன்றை செய்துள்ளார். அந்த ஸ்டம்பிங், ரசிகர்களை மட்டுமல்லாது தோனியையே வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு சமயோசிதமான ஸ்டம்பிங் ஆகும். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். அவர் பேட்டிங்கில் சொதப்பி விமர்சனங்களை சந்தித்துவரும் இந்த நிலையிலும் இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம் அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாடுதான். 

அனைத்துக்கால கிரிக்கெட்டின் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனி, அதிவேகம், சமயோசித சிந்தனை ஆகியவற்றால் ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்களை செய்து ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையும் மிரட்டிவிடுவார். இளம் வீரர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களை சொல்லி கொடுப்பதில் தோனிக்கு அளாதி பிரியம்.

இந்திய இளம் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் எதிரணி வீரர்களுக்கும் விக்கெட் கீப்பிங் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பார். அப்படி தோனியிடம் அதிகமாக கற்றுக்கொண்ட விக்கெட் கீப்பர் என்றால், இளம் வீரர் இஷான் கிஷான் தான். இவரும் தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டை சேர்ந்தவர் தான். தோனியிடமிருந்து நுணுக்கங்களை கற்றுக்கொண்ட இஷான் கிஷான், இந்த இளம் வயதிலேயே தோனியை விட சமயோசிதமாக ஸ்டம்பிங் ஒன்றை செய்துள்ளார். 

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் டெல்லியிடம் தோல்வியடைந்து இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணி வெளியேறியது. அரையிறுதியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ஹிம்மத் சிங்கை இஷான் கிஷான் சமயோசிதமாக சிந்தித்து பதற்றப்படமால் ஸ்டம்பிங் செய்துள்ளார். 

விக்கெட் கீப்பிங்கில் பந்தை பிடித்த இஷான் கிஷான், ஸ்டம்பை அடிப்பதற்காக கையை கொண்டுபோய் பாதியில் நிறுத்தினார். கிரீஸுக்குள் நின்ற பேட்ஸ்மேன் ஹிம்மத் சிங், பேலன்ஸ் செய்வதற்காக காலை சற்று தூக்கப்போகிறார் என்பதை கணித்த இஷான் கிஷான், பந்தை கையிலேயே வைத்திருந்தார். ஹிம்மத் சிங் காலை தூக்கிய கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார்.

இதனால் ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்த ஹிம்மத் சிங்கிற்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்ததும்தான் தான் அவுட்டாகியிருப்பது தெரிந்தது.