சௌரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய மூவரின் கேப்டன்சி குறித்தும் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

கங்குலி:

முன்னாள் கேப்டனும் தாதா என அழைக்கப்படுபவருமான சௌரவ் கங்குலி, களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டவர் தான். எதிரணியினரின் அதிகப்பிரசங்கி தனமான நடவடிக்கைகளுக்கு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுப்பது, தவறு நடந்தால் பொங்கி எழுவது, அணியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்து வழிநடத்துவது என தனக்கென ஒரு பாணியை வைத்து செயல்பட்டவர் கங்குலி.

2003ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டிவரை அழைத்து சென்றார் கங்குலி. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்று கோப்பையை இழந்தது இந்திய அணி.

தோனி:

அதன்பிறகு, மகேந்திர சிங் தோனி. இவர் மிகவும் கூலான கேப்டன். எந்த நேரத்திலும் பதற்றத்தை வெளிப்படுத்தாமல், தானும் கூலாக இருந்து வீரர்களையும் கூலாக வைத்துக்கொள்வார்.

அதுதான் தோனியின் பலமும் கூட. இவரது கேப்டன்சியில் மூன்றுவிதமான கோப்பைகளையும் இந்திய அணி வென்றது.

கோலி:

தோனிக்கு அடுத்து கோலி. கோலி மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். கங்குலியை மிஞ்சிய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் கோலி. கோலியின் அணுகுமுறைக்கு கங்குலி ஆதரவு தெரிவித்தபோதிலும் பல முன்னாள் ஜாம்பவான்கள், கோலியின் ஆக்ரோஷத்தை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இவ்வாறு கங்குலி, தோனி, கோலி என ஒவ்வொருவரும் அவருக்கே உரிய பாணியில் அணியை வழிநடத்தினர்.

இர்ஃபான் பதான் கருத்து:

இந்நிலையில், இவர்களின் கேப்டன்சி தொடர்பாக ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இர்ஃபான் பதான், ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டு. தாதா (கங்குலி) ஆக்ரோஷம் காட்டுவார். அப்போது இளம் வீரர்கள் அணிக்கு வந்த சமயம். தோனி கேப்டனான போது அவர் கூலான அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அவரைச் சுற்றி உள்ள வீரர்கள் அவரை எப்போதும் பின்பற்றுவார்கள். எனவே ஒரு அணிக்கு தன்னுடைய இயல்பானவற்றை வெளிப்படுத்தும் கேப்டன் தேவை. விராட் கோலி தானாகவே இருக்கிறார் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.