ipl final broadcast on the LED screen tomorrow at nagarkoil
நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரமாண்ட திரையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சரவண சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கூறியது:
“ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை பி.சி.சி.ஐ. சார்பில் 'ஐபிஎல் ஃபேன் பார்க்' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெறுகிறது. அதன்படி நாளை நடைபெறவுள்ள பத்தாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் 32 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது.
நாட்டின் தெற்கே நாகர்கோவில், வடக்கே வாராணசி, கிழக்கே ராஞ்சி, மேற்கே நாசிக் என 4 இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 ஆயிரம் பேர் ஆட்டத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனுமதி இலவசம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
