ipl auctioneer reveals the most surprising moment in ipl auction

ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கெய்ல் புறக்கணிக்கப்பட்டது தனக்கே பெரிய வியப்பாக இருந்ததாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடத்தும் ரிச்சர்ட் மேட்லி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த ஏலம் பல ஆச்சரியங்களை அளித்தது. சர்வதேச அளவில் சிறந்த வீரர்கள், ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

ஐபிஎல்லும் சர்வதேச டி20 போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கிறிஸ் கெய்ல், ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டார். அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு கூட ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அவரை போலவே ஆம்லா, மார்டின் கப்டில், ஜேம்ஸ் ஃபாக்னர், ஜோ ரூட் உள்ளிட்ட பல வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

இரண்டாவது ஏலத்திலும் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. மூன்றாவது முறையாக கெய்ல் ஏலம் விடப்பட்டபோதுதான், சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி கெய்லை, அடிப்படை விலையான 2 கோடிக்கு எடுத்தது.

கடந்த சில சீசன்களாக கெய்ல் ஆடிய பெங்களூரு அணி, அவரை எடுக்க விரும்பவில்லை. தன்னை தக்கவைப்பதாக உறுதியளித்து பெங்களூரு அணி ஏமாற்றிவிட்டதாக கெய்ல் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தை நடத்துபவரான ரிச்சர்ட் மேட்லி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் தொடர்பாக பேசிய அவர், கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காமல் இருந்தது பெரிய வியப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் இரண்டு முறை ஏலத்தில் எடுக்கப்படாதது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.