கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த 11 சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) அணிகள் தலா இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல் நடத்தப்படும் காலம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவதில் இருந்தே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிவிடும். வழக்கமாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் தான் நடக்கும். 

ஆனால் இந்த முறை டிசம்பர் 18ம் தேதியே நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை நடக்க உள்ளதால் ஐபிஎல் தொடரும் மார்ச் மாதமே தொடங்க உள்ளது. அதனால் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால் விரைவில் தொடங்க உள்ளது. அதனால் ஏலமும் முன்னதாகவே நடக்கிறது. 

டிசம்பர் 18ம் தேதி ஏலம் நடக்க உள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளுமே தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டது. எனவே டிசம்பர் 18ம் தேதி ஏலம் நடக்கிறது. வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏலம் இந்த முறை ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

 70 வீரர்களுக்கான ஏலம் மட்டுமே நடைபெறுவதால் ஒரே ஒரு நாள் மட்டுமே ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது.