ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சில போட்டிகளில் நடுவர்களின் சர்சைக்குரிய முடிவுகள் பாதகமாக அமைந்துள்ளன. அது குறித்து பார்ப்போம்.
IPL 2025: controversial decisions by umpires: கிரிக்கெட்டில் நடுவரின் முடிவே இறுதியானது. ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் நடுவர்களின் சில முடிவுகள் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன. 51 போட்டிகளில் பல நடுவர் தவறான தீர்ப்பு அளித்தது கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் சில அணிகள் பயனடைந்தாலும், சில அணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சீசனில் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய 3 சர்ச்சைக்குரிய முடிவுகளைப் பார்ப்போம்.
1. சுப்மன் கில் ரன்-அவுட் சர்ச்சை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். 13வது ஓவரின் கடைசி பந்தில் அவர் ரன்-அவுட் ஆக்கப்பட்டார். அவர் கீரிஸுக்கு வருவதற்கு முன்பு விக்கெட் கீப்பர் ஹென்ரிக் கிளாசன் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அவுட் செய்தார். ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதா அல்லது கிளாசனின் கையுறை பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
2. ரோகித் சர்மாவின் டிஆர்எஸ் சர்ச்சை
மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் ரோகித் சர்மா எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 15 வினாடிகள் முடிந்த பின்னர் அவர் டிஆர்எஸ் கேட்டார். நடுவர் அதை ஏற்றுக்கொண்டார். டிஆர்எஸ்-ல் அவர் அவுட் இல்லை எனத் தெரியவந்தது. ஆனால் நேரம் முடிந்த பின்னரும் அவர் டிஆர்எஸ் எடுக்க அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
3. இஷான் கிஷன் அவுட் சர்ச்சை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் இஷான் கிஷன் பேட்டிங் செய்தபோது பந்து பேடில் படவில்லை என்றாலும் நடுவர் அவுட் கொடுத்தார். நடுவர் முதலில் வைட் கொடுக்கச் சென்று பின்னர் அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இஷான் கிஷனும் டிஆர்எஸ் ஏதும் எடுக்காமல் நடையை கட்டியது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.


