மலேசியாவில் 2010-ல் அறிமுக வீரராக களமிறங்கினேன், 2011-ல் ஹாட்ரீக் கோலடித்தேன் என்று இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் ரூபிந்தர் பால் சிங் இதுவரை 10 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் முதல்முறையாக 10 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “10 கோல்களை அடித்திருப்பது எனக்குள் அருமையான உணர்வைத் தந்துள்ளது. முக்கியமான நேரத்தில் கோலடிப்பது எப்போதுமே அற்புதமான உணர்வை தரும். பெனால்டி வாய்ப்பில் கோலடிப்பதே எனது பணி. அதற்காகவே இந்திய அணியில் நான் இருக்கிறேன்.

2010-ல் இதே மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியின்போதுதான் நான் சர்வதேச ஹாக்கிப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினேன்.

2011-ல் இங்கு நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தேன்.

இந்த கோல்கள் அனைத்துமே எனது இனிமையான நினைவுகளில் ஒரு பகுதியாக இருக்கின்றன” என்று பகிர்ந்தார்.