சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கும் , பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறினர்.

சர்வதேச பாட்மிண்டன் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில்,  பிரணாய் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முன்னாள் 3-ஆம் நிலை வீரரான தாய்லாந்தின் டாமி சுகியார்டோவை 21-10, 21-19 என்ற செட்களில் வென்றார். 

காலிறுதியில் சீனாவின் ஹியுவாங் யுக்ஸியாங்கை எதிர்கொள்கிறார் பிரணாய். 

ஹியுவாங் யுக்ஸியாங் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-11, 15-21, 22-20 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் தனது காலிறுதியில் ஜப்பானின் நஸாமி ஒகுஹராவை 20-22, 21-18, 21-18 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இது, நஸாமிக்கு எதிராக சிந்து பதிவு செய்யும் 5-ஆவது வெற்றியாகும்.

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிரக் ஷெட்டி இணை 16-21, 21-16, 21-23 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் மதியாஸ் போ - கார்ஸ்டென் மோகென்சென் இணையிடம் தோல்வி கண்டது.

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 6-21, 10-21 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங் யிலியு-ஹுவாங் டாங்பிங் ஜோடியிடம் தோற்றது.