எனது அர்ப்பணிப்பை கேள்விக்குள்ளாவதா என தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரரான முரளி விஜய் கொந்தளித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் காயம் காரணமாக முரளி விஜய் ஆடவில்லை. இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள முரளி விஜய், தென்னாப்பிரிக்க தொடரில் சரியாக ஆடாதது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முரளி விஜய், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. நிலைத்து நின்று அதிக ரன்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் நான் அதிக ரன்கள் குவிக்கவில்லை. சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆடாததுதான் அதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசி திறமையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அவர்களின் ஆடுகளமும் வித்தியாசமாக இருந்தது. அங்கு சில அனுபவங்களைக் பெற்றேன்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில், மும்பைக்கு எதிரான அந்த முக்கியமான போட்டியில் ஆடியிருக்க வேண்டும். காயம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது. ஆனால் அது பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் கூட எனது அர்ப்பணிப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. 

தமிழ்நாட்டு அணிக்காக விளையாடுவதை எப்போதுமே விரும்பும் நான், அதை பெருமையாகவே கருதுகிறேன். இதுகுறித்து தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்திடம் விரைவில் பேசுவேன். ரஞ்சி போட்டியில் தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதில்தான் எனது கவனம் இருக்கிறது என முரளி விஜய் தெரிவித்தார்.