ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்குச் சொக்கியது.

ஆஸ்திரேலியா 298 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளம், ஆறு விக்கெட்டை கைவசம் வைத்துள்ளதால் இந்தியாவின் வெற்றி கைமாறிப் போக வாய்ப்புகள் அதிகம்.

புணேவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா 68 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மிட்செல் ஸ்டார்க் 57, ஹேஸில்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மேலும் 4 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் விக்கெட்டை இழந்தது. அவர் 63 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது. ஹேஸில்வுட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் - கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 26 ஓட்டங்கள் சேர்த்தது. முரளி விஜய் 10 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து ராகுலுடன் இணைந்தார் புஜாரா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா 6 ஓட்டங்களில் கிளம்பினார்.

இதையடுத்து வந்த கேப்டன் கோலி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

அடுத்து அஜிங்க்ய ரஹானே களம்புகுந்தார். அவர் ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல் 84 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

இதன்பிறகு சற்று வேகமாக ரன் சேர்த்த ராகுல், ஓ"கீஃப் வீசிய 33-ஆவது ஓவரில் வார்னரிடம் கேட்ச் ஆனார். அவர் 97 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார். அதே ஓவரில் ரஹானேவும் (13), ரித்திமான் சாஹாவும் (0) ஆட்டமிழக்க, நாதன் லயன் வீசிய அடுத்த ஓவரில் அஸ்வின் 1 ரன்னில் வீழ்ந்தார்.

இதன்பிறகு ஜெயந்த் யாதவ் 2, ஜடேஜா 2, உமேஷ் யாதவ் 4 ரன்களில் நடையைக் கட்ட, 40.1 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சொக்கியது இந்தியா.

இந்திய வீரர்களில் ராகுல், விஜய், ரஹானே ஆகியோரைத் தவிர எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டீவ் ஓ"கீஃப் 13.1 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் ரன் ஏதுமின்றியும், டேவிட் வார்னர் 10 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு வந்தவர்களில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 19, ரென்ஷா 31 ஓட்டங்களில் வெளியேறினாலும், மூன்று முறை ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 93 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒட்டுமொத்தமாக 298 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் இருப்பதால், இந்தியாவுக்கு வலுவான வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதால் இலக்கை எட்டுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இப்போது, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

கடுமையான ஆட்டத்தை இந்தியா தராவிட்டால், வெற்றி கைமாறி போகும்.