Indian Women - Belgium Junior teams ended in a hockey match
இந்திய மகளிர் அணி - பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணிகள் இடையிலான வலைகோல் பந்தாட்டப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இந்திய மகளிர் அணி - பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணிகள் இடையிலான ஹாக்கிப் போட்டி பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை இந்திய வீராங்கனைகள் தவற விட்டனர்.
மூன்றாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை பெல்ஜியம் கோல்கீப்பர் தடுத்தார்.
முதல் ஆறு நிமிடங்களில் பெல்ஜியம் அணிக்கு மூன்று பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை இந்திய கோல் கீப்பர் சவீதா தகர்த்தார். இதனால் முதல் கால் ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது கால் ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஸ்டான் பிரானிக்கி கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதன்பிறகு 3-வது கால் ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் நிக்கி பிரதான் கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
அதனைத் தொடர்ந்து இந்திய வீராங்கனை நேஹா கோயலின் கோல் வாய்ப்பை பெல்ஜியம் கோல் கீப்பர் முறியடித்தார். இதனிடையே 43-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மேத்யூ கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து அபாரமாக ஆடிய இந்திய அணியில் வந்தனா கேத்ரியா 54-வது நிமிடத்தில் கோலடிக்க, ஸ்கோர் மீண்டும் சமநிலையை எட்டியது.
இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
