Indian Wells tennis Roger Federer of Switzerland progress to quarter-finals
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் உலகின் முதல் நிலையில் இருக்கும் ரோஜர் ஃபெடரர், தனது 4-வது சுற்றில் 7-5, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியை வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "மூன்று ஆட்டங்களில் வென்றுள்ள நிலையில் திருப்தியாக உணர்கிறேன். ஏனெனில், இன்டியன் வெல்ஸ் போன்ற கடுமையான டிரா இருக்கக் கூடிய போட்டியில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க இயலாது" என்றார்.
ஃபெடரர் தனது காலிறுதியில் தென் கொரியாவின் சங்ஹியோனை எதிர்கொள்கிறார்.
முன்னதாக சங் ஹியோன் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 30-வது இடத்தில் இருந்த உருகுவேயின் பாப்லோ கியூவஸை 6-1, 6-3 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தார்.
இந்த ஆண்டில் ஃபெடரர் - ஹியோன் சந்திப்பது இது 2-வது முறையாகும். முன்னதாக கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஃபெடரரும் - ஹியோனும் மோதினர்.அந்தப் போட்டியில் சிறப்பாக முன்னேறி வந்த ஹியோன், காலில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஃபெடரரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
v
