இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்திய நிலையில், இந்திய அணியோ மூன்றிலுமே சொதப்பியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 219 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்வி அதுதான். 

இதையடுத்து இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளன. 

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் இந்த போட்டியிலும் ஆடுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

டாஸ் போட்ட பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இலக்கை விரட்டுவதுதான் எங்களது பலம். அந்த வகையில் டாஸ் வென்றிருந்தால் நாங்கள் முதலில் பவுலிங் செய்யத்தான் இருந்தோம். இன்றைய போட்டியில் நன்றாக ஆடி வெல்வோம் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் இழைத்த தவறுகள் குறித்து விவாதித்திருக்கிறோம். அதனால் அவற்றை திரும்ப செய்யமாட்டோம் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் ஆடுகிறோம். அணியில் எந்த மாற்றமும் இல்லை. குருணலுக்கு பதில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற கருத்துகள் இருப்பது தெரியும். குல்தீப் யாதவ் மிகச்சிறந்த பவுலர். எனினும் மற்ற வீரர்களையும் வெளிநாட்டு சூழலில் ஆடவைத்து சோதிக்க விரும்புகிறோம். ஒரு போட்டியில் சரியாக ஆடாததை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.