சச்சின் டெண்டுல்கரின் அறிவுரையை சரியாக பின்பற்றாமல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வாங்கிக்கட்டியது இந்திய அணி.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து தோல்வியை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் போட்டி அடிலெய்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வழக்கம்போலவே ராகுல் வந்ததும் வெறும் 2 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து முரளி விஜய்(11), கோலி(3), ரஹானே(13), ரோஹித் (37) என வரிசையாக வெளியேறினர். இதையடுத்து 38 ஓவர்களிலேயே 100 ரன்களுக்கு உள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

அதன்பிறகு களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், வந்தது முதலே அதிரடியாக ஆடினார். 25 ரன்களில் அவரும் நடையை கட்டினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போட்டு நின்றுவிட்ட புஜாரா, நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவருகிறார் அஷ்வின். 

40 ஓவர்களுக்கு உள்ளாகவே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதை செய்துவிட வேண்டாம் என்றுதான் சச்சின் டெண்டுல்கர் முன்னதாக அறிவுரை கூறியிருந்தார். 40 ஓவர்கள் வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்துவிடாமல் நிதானமாக நிலைத்து நின்று ஆடிவிட்டால், அதன்பிறகு ஆடுகளம், பந்து இரண்டுமே கடினத்தன்மையை இழந்துவிடும். அதன்பிறகு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி ஆடலாம். அதனால் முதல் 40 ஓவர்களுக்கு விக்கெட்டுகளை இழந்துவிடாமல் ஆட வேண்டும் என்று சச்சின் அறிவுறுத்தியிருந்தார். 

ஆனால் சச்சின் டெண்டுல்கரின் அறிவுரையை முறையாக பின்பற்றாமல் 40 ஓவர்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. சச்சின் டெண்டுல்கர் இதே அறிவுரையைத்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாகவும் தெரிவித்தார். ஆனால் அப்போதும் இந்திய அணி அதை பின்பற்றவில்லை. விளைவு, தொடரை இழந்து நாடு திரும்பியது. தற்போதும் சச்சின் டெண்டுல்கர் அறிவுரையை பின்பற்றாமல் திணறிவருகிறது.