ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி குறித்து கவாஸ்கரின் கருத்து துட்சமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

இந்த போட்டியில் 7 பேட்ஸ்மேன்கள், ஒரு ஸ்பின்னர் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அஷ்வின் ஆகிய 4 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.  

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என்பதால், அடிலெய்டில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கும் ஸ்பின்னர் குறித்து கருத்து தெரிவித்திருந்த கவாஸ்கர், அடிலெய்டு டெஸ்டில் அஷ்வினை காட்டிலும் குல்தீப் யாதவ் தான் தன்னுடைய தேர்வு என்று கூறியிருந்தார். குல்தீப் யாதவின் பந்துவீச்சில் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதால், டெஸ்ட் போட்டியிலும் குல்தீப்பின் பவுலிங்கை கணிக்க முடியாமல் திணறுவர் ; அதனால் குல்தீப் யாதவே தன்னுடைய தேர்வு என்று கவாஸ்கர் கூறியிருந்தார். 

கவாஸ்கர் தன்னுடைய கருத்தை நேர்மையாக வெளிப்படையாக கூறுபவர். அப்படித்தான் இந்த கருத்தையும் கூறியிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆடிய அனுபவங்களைக் கொண்ட அஷ்வின் தான் இந்திய அணியில் எடுக்கப்பட்டார். குல்தீப் யாதவ் முதல் டெஸ்ட் போட்டியில் புறக்கணிக்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த அனுபவத்தை பெற்றிருக்கும் அஷ்வினால் தான் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணி நம்புகிறது. மேலும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அஷ்வினால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். முதல் இன்னிங்ஸில் இக்கட்டான சூழலில் 76 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் எடுத்தார் அஷ்வின். அணியின் நம்பிக்கையை வீணடிக்கவில்லை. பவுலிங்கும் கண்டிப்பாக நன்றாக வீசுவார் என்று நம்புவோம்.