வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது குறித்தும் அப்போதைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் கோலி மனம்திறந்து கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பரபரப்பான கடைசி ஓவரில் டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலியின் அபார சதத்தால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 321 ரன்களை குவித்தது. 

அதுவும் கடைசி நேரத்தில் கோலி அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசியதால்தான் இந்த ஸ்கோர் வந்தது. இல்லையெனில் 20 ரன்கள் குறைவாகவே இருந்திருக்கும். 321 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். 322 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் தான் குவித்திருந்தது. அதே ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. 

இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட தொடங்கினார். முதல் விக்கெட்டாக பவல் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அந்த அணியின் ஹேம்ராஜை குல்தீப் வீழ்த்தினார்.  78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர், போட்டியை இந்தியாவிடமிருந்து பறித்தார். 

அதிரடியாக ஆடிய ஹெட்மயர், சிக்ஸர்களாக விளாசி இந்திய அணியை மிரட்டினார். சாஹல், ஜடேஜா ஆகியோரின் பந்துகளை பறக்கவிட்டார். களத்தில் ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ஆடிய ஹெட்மயர், இந்தியாவின் நம்பிக்கையை சிதைத்தார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. முதல் போட்டியில் சதமடித்த ஹெட்மயர், அடுத்த சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, சாஹலின் பந்தில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

32 ஓவருக்கே 221 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்திருந்த நிலையில், ஹெட்மயர் 4வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக போட்டிக்குள் வந்தது. ஹெட்மயரை தொடர்ந்து பவலை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். பவல், ஹோல்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ஷாய் ஹோப் அருமையாக ஆடி சதம் விளாசினார். 

ஹோப் சதம் அடித்திருந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்ததால் மொத்த பாரமும் ஹோப் மீது இறங்கியது. அதை பயன்படுத்தி இந்திய வீரர்கள் நெருக்கடி கொடுத்து, ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். டெத் ஓவர்களை ஜடேஜா, குல்தீப், சாஹல், ஷமி, உமேஷ் என அனைவருமே தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக வீசி, வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றிருக்க வேண்டிய வெற்றியை தடுத்து டிரா செய்தனர். போட்டி பரபரப்பான கடைசி ஓவரில் டிராவில் முடிந்தது. 

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும் ஹெட்மயரும் ஹோப்பும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இரண்டு அணிகளும் ஆடிய விதத்திற்கு, போட்டி டிராவில் முடிந்தது என்பது நல்ல முடிவுதான். இந்த முடிவிற்கு அவர்கள் தகுதியானவர்கள். எனது ஆட்டமும் நான் எட்டிய மைல்கற்களும் மகிழ்ச்சியளிக்கின்றன. கடைசி நேரத்தில் நான் அடித்து ஆடியதால் 30 ரன்கள் அதிகமாக கிடைத்தன.

அந்த அணி வெற்றி பெற தேவையான ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாக இருந்தது. அந்த அணி வலுவாக இருந்தபோது போட்டி முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால் குல்தீப் பிரேக் கொடுத்து எங்களை போட்டிக்குள் மீண்டும் கொண்டுவந்தார். சாஹல், ஷமி, உமேஷ் ஆகியோரும் கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசினர். கடைசி 7 ஓவர்களில் போட்டி தலைகீழாக திரும்பியது. இது ஒரு அருமையான போட்டி. நாம் அனைவருமே ரசித்து மகிழ வேண்டிய போட்டி இது என்று கோலி தெரிவித்தார்.