தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள்தான் இந்திய அணிக்கு தேவை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டி தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்த இறுதிப்போட்டியில் அவர் ஆடிய விதம் நிறைய நம்பிக்கையை அளிக்கும். மிகவும் முக்கியமானது என்னவென்றால் அவர் தனது திறமை மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார். எந்த வகையான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பார். 

பேட்டிங்கில் முன்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, பின்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, எதற்கும் அவர் தயாராக இருப்பார். இதுபோன்ற வீரர்கள்தான் நமது அணிக்கு தேவை.

நான் அவுட் ஆகி வீரர்கள் இருக்கும் இடத்துக்கு சென்ற போது தினேஷ் கார்த்திக் வருத்தத்தில் இருந்தார். அவரை 6-வது வீரராக களம் இறக்காததால் ஆதங்கத்துடன் காணப்பட்டார். நீங்கள் கடைசியில் களம் இறங்கி ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக முடித்து தர வேண்டும் என விரும்புகிறேன் என்று அவரிடம் நான் சொன்னேன். ஏனெனில், உங்களிடம் உள்ள திறமை கடைசி மூன்று, நான்கு ஓவர்களில் தேவைப்படும் என்றேன். 

அந்த காரணத்தினால் 13-வது ஓவரில் நான் ஆட்டம் இழக்கும் போது தினேஷ் கார்த்திக் 6-வது வீரராக களம் இறக்கப்படவில்லை. அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஆட்டத்தை முடித்த விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. அணியில் இடம் பிடித்த எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். சில வீரர்கள் தேசிய அணிக்காக அதிகம் விளையாடிய அனுபவம் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயல்பட்டது எளிதான காரியம் அல்ல. இந்த வெற்றி அணிக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்து இருக்கிறது. 

கடைசி பந்தில் நமது அணி வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு வேளை கடைசி பந்து பவுண்டரிக்கு சென்று ஆட்டம் ‘டை’ ஆனால் சூப்பர் ஓவருக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்ததால் நான் ஓய்வறைக்கு சென்று காலுறை கட்ட தயாரானேன். இதனால் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியதை நான் நேரில் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.