காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தால் திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதில், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு அதிகமுள்ளது.

அதன்படி, ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியர்களான பிரணதி நாயக், பிரணதி தாஸ், அருணா ரெட்டி ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதில், அருணா ரெட்டி 13.300 புள்ளிகளும், பிரணதி நாயக் 13.200 புள்ளிகளும் குவித்தனர். பெண்களுக்கு 4 துணைப் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வால்ட் இறுதிச் சுற்று தீர்மானிக்கப்படுகிறது. 

இதுகுறித்து உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற அருணா கூறுகையில், "கடினமான உழைப்பின் பயனாக இங்கு சிறப்பாக செயல்பட முடிந்தது. அடுத்து வரும் சுற்றுக்களில் சிறப்பாக செயல்படுவோம்" என்றார். 

ஆடவர் பிரிவில் ஆசீஷ்குமார் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது என்பது கொசுறு தகவல்.