ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்களும் பவுலிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 14வது ஆசிய கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த தொடரில் மொத்தமாக 6 போட்டியில் ஆடிய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டும் டிரா ஆனது. 

மிடில் ஆர்டரில் பல மாதங்களாகவே சொதப்பிவரும் இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் அபாரமாக ஆடினர். தவான் இரண்டு சதங்களும் ரோஹித் சர்மா ஒரு சதமும் விளாசினர். 

ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 884 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 842 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் 802 புள்ளிகளுடன் ஷிகர் தவான் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.

பவுலிங்கை பொறுத்தமட்டில் 797 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும் 700 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் மூன்றாமிடத்திலும் உள்ளனர். 788 புள்ளிகளுடன் ஆஃப்கானிஸ்தான் சுழல் மன்னன் ரஷீத் கான் இரண்டாமிடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்களும் பவுலிங்கில் முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்களும் உள்ளனர். ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு ஆல்ரவுண்டர் கூட இல்லை.