ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஎஃப்சி) சார்பில் வழங்கப்படும் உறுப்பினர் சங்க கால்பந்து மேம்பாட்டு விருதுக்கு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருது விவரம் அபுதாபியில் வியாழக்கிழமை இரவு நடைபெறும் ஏஎஃப்சி விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும்.

சிறந்த நிர்வாகம் மற்றும் அனைத்து நிலைகளிலும் கால்பந்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சிறப்பான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் அடுத்த ஆண்டு 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு இந்த ஆண்டு 20 அடிப்படை பயிற்சி முகாம்கள், வளர்ந்து வரும் பயிற்சியாளர்களுக்காக 60 முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன' என குறிப்பிட்டுள்ளது.