15-வது ஓவரில் இந்திய அணியின் புஜாராவை 6 ஓட்டங்களிலும், அதே ஒவரில் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

பிறகு ஆடத் தொடங்கியுள்ள இந்திய அணி, 16 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி 5 பெளலர்களுடன் களமிறங்கியது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் இடம்பெற்றார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.

மிட்செல் ஸ்டார்க் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57, ஹேஸில்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் விக்கெட்டை 61 ஓட்டங்களில் வீழ்த்தினார் அஸ்வின்.

இதனால் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 12 ஓவர்களில் 32 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஆடத் தொடங்கினார்கள் முரளி விஜய்யும் ராகுலும். ஆனால் விஜய், ஹேஸில்வுட்டின் பந்துவீச்சில் 10 ஓட்டங்களில் வீழ்ந்தார்.

இதன்பிறகு 15-வது ஓவரில் இந்திய அணிக்குப் பேரிடியை அளித்தார் ஸ்டார்க். அந்த ஓவரில் புஜாராவை 6 ஓட்டங்களிலும் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார்.

இரு பந்துகளில் டக் அவுட் ஆகி கோலி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணி 16 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 வெறும் ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.