நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டெத் ஓவர்களில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்து, இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளன. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. கடந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 84 ரன்களை குவித்த சேஃபெர்ட்டை இந்த முறை இந்திய அணி அடித்து ஆட அனுமதிக்கவில்லை. 3வது ஓவரிலேயே சேஃபெர்ட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். 

இதையடுத்து குருணல் பாண்டியா வீசிய 6வது ஓவரின் இரண்டாவது பந்தில் முன்ரோவையும் கடைசி பந்தில் மிட்செலையும் வீழ்த்தினார் குருணல். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 7வது ஓவரை சாஹல் வீச, மீண்டும் 8வது ஓவரை வீசிய குருணல் பாண்டியா, அந்த ஓவரின் 5வது பந்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை வீழ்த்தினார். 17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வில்லியம்சன் வெளியேறினார். 

அதன்பிறகு ரோஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்த கோலின் டி கிராண்ட்ஹோம் களமிறங்கியது முதலே அடித்து ஆடினார். சாஹல் வீசிய 11வது ஓவர் மற்றும் குருணல் பாண்டியா வீசிய 12வது ஓவர் ஆகிய இரண்டு ஓவர்களிலும் தலா 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். அதிரடியாக ஆடிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். கிராண்ட்ஹோம் அவுட்டானதும் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் குறைந்தது. 

16வது ஓவரில் கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்க, கடைசி நான்கு ஓவர்களை இந்திய பவுலர்கள் அருமையாக வீசினர். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான புவனேஷ்வர் குமார், 17 மற்றும் 19 ஆகிய இரண்டு ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை வீசிய கலீல் அகமது, அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவர்களில் இந்திய அணி அபாரமாக வீசி நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தியது. டெத் ஓவர்களில் இந்திய அணியின் சிறப்பான பவுலிங்கால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி.