indian batsmen attacked rashid and 474 runs in first innings
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் ஆடிவருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் ஓவர்களை தவான் அடித்து ஆடினார். தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடிய தவான், முதல் நாளான நேற்று, உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதமடித்தார். 107 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய், தவான் ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார். முரளி விஜயும் சதமடித்தார். 104 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ராகுல் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். புஜாரா 35 ரன்களும் ரஹானே 10 ரன்களும் மட்டுமே எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் ரன் அவுட்டானார். ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி 71 ரன்கள் குவித்தார். அஷ்வின், ஜடேஜா ஆகியோர் முறையே 18 மற்றும் 20 ரன்கள் எடுத்தனர். கடைசி வரிசையில் களமிறங்கிய உமேஷ் யாதவ், 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இரண்டாம் நாளான இன்று, உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 474 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்னும் அதிகமான ரன்கள் குவித்திருக்கலாம் என்றாலும், நேற்று இரண்டு முறை மழை குறுக்கிட்டது, ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
எனினும் ஆஃப்கானிஸ்தான் அணியால் பெரிதும் நம்பப்பட்ட ரஷீத் கான் 154 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதேபோல் முஜீபுர் ரஹ்மானும் 15 ஓவர்களை வீசி 75 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகியோரை இந்திய அணியின் ஸ்பின்னர்களை விட சிறந்த ஸ்பின்னர்கள் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் கூறியதற்கு, பேட்டிங்கின் மூலம் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
