ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. 

7வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் வங்கதேச அணியும் களம் காண்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் இந்தியாவும் வங்கதேசமும் தான் மோதின. அப்போது வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. 

அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த முறை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்வதில் வங்கதேசம் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இந்திய அணியும் வலுவாக உள்ளது. ரோஹித், தவான், ராயுடு ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரும் அசத்தலாக பந்துவீசி வருகின்றனர். ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகிய ஆல்ரவுண்டர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் அவ்வப்போது பிரேக் கொடுக்கிறார். 

இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

இந்திய அணியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட 5 வீரர்களும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மற்ற போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள் மீண்டும் களமிறங்குகின்றனர். ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், சித்தார்த் கவுல் மற்றும் கலீல் அகமது ஆகிய 5 பேரும் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய 5 பேரும் களமிறங்கியுள்ளனர். வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை.