ஐரோப்பிய வலைகோல் பந்தாட்டத் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றதன்மூலம் ஐரோப்பிய தொடரை கைப்பற்றியது.

ஐரோப்பிய வலைகோல் பந்தாட்டத் தொடரின் கடைசி ஆட்டம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நேற்று நடைபெற்றது/

இந்தியா 5-வது ஆட்டத்தில் ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய அணி பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இருந்தபோதும், 14-வது நிமிடத்தில் ஆஸ்திரிய வீரர் ஆலிவர் பிந்தர்ஸ் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் 25-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரமன்தீப் சிங், அதை கோலாக்க, 1-1 என்று ஸ்கோர் சமநிலையை எட்டியது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 32-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தார் ரமன்தீப் சிங்கே.

37-வது நிமிடத்தில் மன்தீப் சிங் மற்றொரு கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, அதில் துணை கேப்டன் சிங்லென்சனா சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது பெனால்டி வாய்ப்பில் ஆஸ்திரியாவின் மைக்கேல் கார்பர் கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் பாட்ரிக் ஸ்கிமிட் கோலடித்தார். இதனால் ஸ்கோர் 3-3 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இதனால் கடைசி சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது. ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் முடிய 10 விநாடிகளே இருந்த நிலையில் குர்ஜந்த் கொடுத்த கிராஸை பயன்படுத்தி சிங்லென்சனா சிங் கோலடிக்க, இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின்மூலம் ஐரோப்பிய தொடரை வெற்றியுடன் கைப்பற்றியது இந்தியா.

மன்தீப் சிங் தலைமையிலான இளம் இந்திய அணி. இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்றது என்பது கொசுரு தகவல்.