India won 5 gold in weightlift Mary Kom in the semi-final - a lot more commonwealth updates ...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

இதில் குத்துச்சண்டப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அறிமுக வீரர்களான கெளரவ் சோலங்கி 52 கிலோ பிரிவில், மணிஷ் கெளஷிக் 60 கிலோ பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். 

சோலங்கி 5-0 என்ற புள்ளிக்கணக்கில் கானாவின் அகிமோஸையும், கெளஷிக் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் டிரினிடாட் மற்றும் டொபாக்கோவின் மைக்கேல் அலெக்சாண்டரை வீழ்த்தினர்.

அதேபோன்று, தடகளப் போட்டி உயரம் தாண்டுதலில் தேசிய சாதனையாளர் தேஜஸ்வின் சங்கர் 2.21 மீ உயரம் தாண்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர். 

பெண்கள் 400 மீ தொடக்கச் சுற்றில் ஹீமா தாஸ் 52.11 வினாடிகளில் கடந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

மற்றொரு போட்டியான பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் 105 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடப்புச் சாம்பியனான பர்தீசிங், மொத்தம் 352 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

பளு தூக்குதலில் இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.