India wins victory in retaliation Will the next game live? Death?
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றிப் பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோதிய இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டிலும், காலின் மன்றோவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நியூஸிலாந்து அணி 2.4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மார்ட்டின் கப்டிலை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். அவர் 9 பந்துகளில் 11 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தோனியிடம் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து களம்புகுந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ஓட்டங்களில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து காலின் மன்றோ 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது 7 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது நியூஸிலாந்து.
நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ராஸ் டெய்லர் - டாம் லதாம் இணை 31 ஓட்டங்கள் சேர்த்தது. டெய்லர் 21 ஓட்டங்களில் ஔட்டாக லதாமுடன் இணைந்தார் ஹென்றி நிகோலஸ். இந்த ஜோடி 58 ஓட்டங்கள் சேர்த்தது. லதாம் 62 பந்துகளில் 38 ஓட்டங்கள் சேர்த்து அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிகோலஸுடன் இணைந்தார் டி கிராண்ட்ஹோம். நிகோலஸ் ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தார் டி கிராண்ட்ஹோம். அந்த அணி 37.5 ஓவர்களில் 165 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நிகோலஸை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். நிகோலஸ் 62 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து மிட்செல் சேன்ட்னர் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய கிராண்ட்ஹோம் 40 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் குவித்து சாஹல் பந்துவீச்சில் பூம்ராவிடம் கேட்ச் ஆனார்.
பிறகு மிட்செல் சேன்ட்னர் 29 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, கடைசிக் கட்டத்தில் டிம் செளதியின் அதிரடியால், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்கள் குவித்தது நியூஸிலாந்து.
டிம் செளதி 22 பந்துகளில் 25 ஓட்டங்களும், டிரென்ட் போல்ட் 2 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 7 ஓட்டங்களில் நடையைக் கட்ட, ஷிகர் தவனுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. இந்த இனை 2-வது விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்தது.
ஒருபுறம் ஷிகர் தவன் நிதானமாக ஆட, மறுமுனையில் வேகம் காட்டிய கோலி 29 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் களம்புகுந்த தினேஷ் கார்த்திக் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவன் 63 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இதன்பிறகு ஒரு சிக்ஸரை விளாசிய தவன், மில்னே வீசிய 30-வது ஓவரில் டெய்லரிடம் கேட்ச் ஆனார். அவர் 84 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து களம்புகுந்த ஹார்திக் பாண்டியா, சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாசி, நியூஸிலாந்து பெளலர்களை மிரட்டினார். இதனிடையே கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 76 பந்துகளில் அரை சதம் கண்டார் தினேஷ் கார்த்திக்.
இந்தியா 40.1 ஓவர்களில் 204 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இந்த இணை சிறப்பாக ஆட, இந்தியா 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்து அசத்தலான வெற்றி கண்டது.
இதன்மூலம் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
தினேஷ் கார்த்திக் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள், தோனி 21 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கான்பூரில் நடைபெறுகிறது.
