19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடர் கடந்த மாதம் 29ம் தேதி முதல் வங்கதேசத்தில் நடந்தது. இந்த தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், மற்றொரு அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி தாக்காவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் அனுஜ் ராவட் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 121 ரன்களை சேர்த்தனர். அனுஜ் ராவட் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். 41வது ஓவரின் 5வது பந்தில் இந்திய அணியின் ஸ்கோர் 194 ரன்களாக இருந்தபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதன்பிறகு எஞ்சிய 9 ஓவர்களில் கேப்டன் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகிய இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன்களை குவித்தனர். கேப்டன் சிங் 37 பந்துகளில் 65 ரன்களும் பதோனி 28 பந்துகளில் 52 ரன்களும் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை குவித்தது. 

305 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் மதுஷ்கா 49 ரன்களும் பரணவிதானா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணியின் ஹர்ஷ் தியாகியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஹர்ஷ் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 38.4 ஓவரில் வெறும் 160 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 6வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று அசத்தியது.