இந்தியா – வங்கதேசத்திற்கிடையே நடைபெற்ற டி 20 இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தினேஷ் அடித்த ஒரு சிக்சர் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்று வந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும், வங்கதேச அணியும் புள்ளிகள் அதிகம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

அதன்படி வங்க தேசம், இந்தியா இடையேயான இறுதிப்போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் தவான் பத்து ரன்களில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

ரோஹித் ஷர்மா 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஆகியோர் நிதானமாக விளையாடினர். கடைசியில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

18வது ஓவரின் கடைசி ஓவரில் மனிஷ் பாண்டே அவுட்டாக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இறங்கியது முதல் 19 வது ஓவரில் இரண்டு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்திலேயே விஜய் அவுட் ஆக ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தியா தோற்றுவிட்டது என்ற முடிவில் ரசிகர்கள் சோகமாக ஸ்டேடியத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஸ்டேடியமே நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க அந்த கடைசிப் பந்தை சிக்ஸராக மாற்றினார் தினேஷ் கார்த்திக். இதைத் தொடர்ந்து இந்தியா திரில் வெற்றி பெற்றது

8 பந்துகளில் 29 ரன்கள் அடித்த கிரேட் தமிழன் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். மற்றொரு தமிழன் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருது பெற்றார்.