India trip in Pyongyang Winter Olympic Games is ended

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங் பிரிவில் இந்திய வீரர் ஜெகதீஷ் சிங் 103-வதாக வந்ததையடுத்து இந்த ஒலிம்பிக்கில் இந்தியர்களின் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவின் சார்பில் ஷிவா கேசவன், ஜெகதீஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். ஷிவா கேசவன், தான் பங்கேற்ற லூக் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து 34-வது இடத்துடன் ஒலிம்பிக்கில் தனது பங்களிப்பை நிறைவு செய்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கான அடுத்த நம்பிக்கையாக கருத்தப்பட்ட ஜெகதீஷ் சிங், கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங் போட்டியில் நேற்று பங்கேற்றார். மொத்தம் 119 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஜெகதீஷ் சிங் 103-வது வீரராக வந்து பந்தயத்தை நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் டரியோ கலாக்னா பந்தய இலக்கை 33.43 நிமிடங்களில் எட்டி தங்கப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக் போட்டியில் அவரது ஹாட்ரிக் தங்கமாகும்.

நார்வேயின் சைமன் கிரூகர் வெள்ளியும், ரஷியாவின் டெனிஸ் ஸ்பிட்சோவ் வெண்கலமும் வென்றனர்.

7-ஆம் நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் ஜெர்மனி 9 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் 15 பதக்கங்களுடன் முதலிடத்திலும், நார்வே 6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் 19 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்திலும், நெதர்லாந்து 6 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் 13 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.