ஹாங்காங் அணிக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. தவான் - ராயுடு ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தும் பின்வரிசை வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி 300ஐ கூட எட்டமுடியாமல் போனது. 

14வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர்.

முதலில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பயன்படுத்தி, பெரிய இன்னிங்ஸை ஆடுவதை விடுத்து, அவசரப்பட்டு தூக்கியடித்து 23 ரன்களிலேயே அவுட்டாகிவிட்டார் ரோஹித் சர்மா. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான், நிதானமாகவும் அதேநேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை தவறவிடாமல் அடித்தும் ஆடினார். இரண்டாவது விக்கெட்டுக்கு தவான் - ராயுடு ஜோடி 116 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ராயுடு 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த தவான் 127 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
அதன்பிறகு களமிறங்கிய தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தினேஷ் கார்த்திக் 33 ரன்களிலும் புவனேஷ்வர் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரன்களை சேர்க்க வேண்டிய கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், இந்திய அணி கடைசி ஓவர்களில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. இதையடுத்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை இந்திய அணி எடுத்தது. தவான் - ராயுடு ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தும் பின்வரிசை வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி 300ஐ கூட எட்டமுடியாமல் போனது.