india srilanka first test match second day cancel
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், பீல்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில், இந்திய அணியில் ஷிகர் தவாணும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 8 ரன்னில் தவாணும், ரன் ஏதும் எடுக்காமல் கேப்டன் விராட் கோலியும் ஆட்டமிழந்தனர்.
17 ரன்களுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. புஜாரா 43 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களும், ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரஹானேவும் அஸ்வினும் தலா 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்தாலும் மறுமுனையில் புஜாரா, நிதானமாக ஆடினார். புஜாராவுடன் சாஹா களத்தில் இருந்தார். 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்றும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால், இரண்டாம் நாள் ஆட்டமும் முடித்துக்கொள்ளப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதிக்கும் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இரண்டு நாள் முடிவடைந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் இரண்டுநாள் ஆட்டமும் பாதிக்கப்பட்டது. இன்னும் முதல் இன்னிங்சின் முதல் பேட்டிங்கே முடிவடையாத நிலையில், இந்த ஆட்டம் டிராவில் முடியவே அதிகமான வாய்ப்பு உள்ளது.
