India senior pace bowler announced his retirement from cricket match ...
வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தோடு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா.
1999-ல் முகமது அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியில் அறிமுகமானார் நெஹ்ரா. 18 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் நெஹ்ரா, கடந்த ஓர் ஆண்டாக அணியில் இடம்பெறாத நிலையில், திடீரென ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும், 120 ஒரு நாள் போட்டிகளில் 175 விக்கெட்டுகளையும், 26 டி20 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
“பெரோஸ் ஷா கோட்லாவில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - நியூஸிலாந்து இடையேயான முதல் டி-20 ஆட்டத்திற்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் விளையாட விரும்பவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா நெஹ்ரா தெரிவித்துவிட்டார்.
இலங்கைக்கு எதிரான தொடர் வரை அவர் விளையாட விரும்புவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு முன்னரே அவர் ஓய்வு பெற முடிவு செய்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஒருவேளை இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஆட்டம் டெல்லியில் நடைபெறாமல் இருந்திருந்தால், ஐதராபாதில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி-20 ஆட்டத்தோடு நெஹ்ரா ஓய்வு பெற்றிருப்பார்.
சொந்த ஊரான டெல்லி ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுவதற்காக அவர் காத்திருக்கிறார்” என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.
