India made 622 runs against India To survive Sri Lanka
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் சதமடித்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ஓட்டங்கள் குவித்திருந்தது இந்தியா.
புஜாரா 128 ஓட்டங்கள், ரஹானே 103 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா அவுட்டானார். அவர் 232 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 217 ஓட்டங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ரஹானேவுடன் இணைந்தார் அஸ்வின். இந்த இணை சிறப்பாக ஆட, இந்தியா 106 ஓவர்களில் 400 ஓட்டங்களை எட்டியது. இந்திய அணி 413 ஓட்டங்களை எட்டியபோது ரஹானே அவுட்டானார். அவர் 222 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் விருத்திமான் சாஹா களமிறங்க, ஹெராத் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 91 பந்துகளில் அரை சதம் கண்டார் அஸ்வின். எனினும் அடுத்த பந்தில் அவர் போல்டு ஆனார். அஸ்வின் 92 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
பிறகு வந்த ஹார்திக் பாண்டியா 20 பந்துகளில் 20 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, டிரிங்க்ஸ் இடைவேளையின்போது 135 ஓவர்களில் 501 ஓட்டங்கள் குவித்திருந்தது இந்தியா.
இதன்பிறகு சாஹா 113 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்தியா 568 ஓட்டங்களை எட்டியபோது சாஹா ஆட்டமிழந்தார். அவர் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் சேர்த்தார்.
அதே ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்டி 70 பந்துகளில் 8-ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார் ஜடேஜா. இதனிடையே முகமது சமி, ஹெராத் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் உமேஷ் யாதவ் களம் புகுந்தார். இந்தியா 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி.
அப்போது ஜடேஜா 85 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள், உமேஷ் யாதவ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
