நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 40 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

இதையடுத்து தொடர்ந்து ஆடிவரும் விராட் கோலிக்கு எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல தோனி காயத்திலிருந்து குணமடையாததால், அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர் தவான், 7 ரன்களில் போல்ட்டின் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதையடுத்து ரோஹித்துடன் அறிமுக வீரர் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். 6வது ஓவரில் தவான் ஆட்டமிழக்க, போல்ட் வீசிய 8வது ஓவரில் 13 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். போல்ட்டின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கோலின் டி கிராண்ட்ஹோம் வீசிய 11வது ஓவரில் ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அந்த ஒரே ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தது, இந்திய அணியை நிலைகுலைய செய்தது. பின்னர் போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே கில்லும் ஆட்டமிழந்தார். 

33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எனினும் அதற்கும் போல்ட் அனுமதிக்கவில்லை. கேதர் ஜாதவை போல்ட்டும் பின்னர் புவனேஷ்வர் குமாரை கோலின் டி கிராண்ட்ஹோமும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி 40 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஹர்திக்கும் குல்தீப்பும் களத்தில் உள்ளனர்.