ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல், முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பவுலிங்கில் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

ராகுலை தொடர்ந்து புஜாராவும் வெறும் 4 ரன்னில் ஹேசில்வுட்டின் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் வழக்கம்போலவே ஆட்டமிழந்ததால், அவரது விக்கெட்டில் பெரிய ஆச்சரியமோ வியப்போ இழப்போ இல்லை. ஆனால் புஜாரா ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரிய இழப்புதான். எனினும் கோலி களத்தில் இருப்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. முரளி விஜயும் நிதானமாக ஆடிவருகிறார்.