ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் சாம்பியன் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்றது. இதில், இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் காஷ்யப், மலேசியாவின் ஜூன் வெய் சீமுடன் மோதினார்.

இதில், 23-21, 21-14 என்ற செட்களில் ஜூன் வெய் சீமை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் வெல்லும் முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய காஷ்யப், "இந்த வாரம் கடினமான ஒன்றாக இருந்தது. கடந்த சில காலமாக ஓர் போட்டியில் 2-க்கு மேற்பட்ட ஆட்டங்களில் நான் வென்றதில்லை. அதிலிருந்து மீண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

காஷ்யப் கடைசியாக கடந்த 2015-ல் சையது மோடி சர்வதேச பாட்மிண்டனில் பட்டம் வென்றிருந்தார்.