பத்தொன்பது வயதுக்குள்பட்டோருக்கான (யு} 19) மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடித்தது.
மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 215 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராவ்லின்ஸ் 96, பார்ட்லெட் 55 ஓட்டங்கள் குவித்தனர்.
இந்தியத் தரப்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளையும், அனுகுல் ராய் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹிமான்ஸ் ரானா 19, பிரியம் கிராக் 8, சல்மான் கான் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க வீரரான ஷப்மான் கில் சதமடித்தார்.
அவர் 157 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்கள் சேர்த்தார்.
இந்தியா 44.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.
ஹார்விக் தேசாய் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ராவ்லின் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
