India is not a change to the differently abled taravanta

துபாயில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் இந்தியா ஐந்து தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றது. இதில், மூன்று தங்கங்களை சுந்தர் சிங் குர்ஜர் பெற்றுள்ளார்.

'ஃபாஸா சர்வதேச ஐபிசி தடகள கிராண்ட் ஃப்ரீ' என்ற பெயரில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில், இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜர் குண்டு எறிதல் போட்டியில் 13.36 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து, தனது 3-ஆவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்குமுன் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியிலும் அவர் தங்கம் வென்றுள்ளார்,

லண்டனில் ஜூலை மாதம் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க தயாராகி வரும் சுந்தர் சிங் குர்ஜர், இப்போட்டியில் வென்றுள்ள பதக்கங்கள், அவருக்கான மற்றும் இந்தியாவுக்கான பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

துபாய் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவர் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர்.

மகளிருக்கான சக்கர நாற்காலி குண்டு எறிதல் போட்டியில் கரம்ஜோதி 5.76 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக சதாப்தி அவஸ்தி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உயரம் தாண்டுதல் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சரத் குமார் 1.66 மீ உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், கிரிஷா நாகராஜ்கெளடா 1.63 மீ உயரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.