india got South africa with its bowling technique...

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 65.5 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தனது அசாத்திய பௌலிங்கால் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்கள் தொடர்ந்து சரிந்தன.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் முடியும் முன்பாகவே 77 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கோலி 54 ஓட்டங்கள் , புஜாரா 50 ஓட்டங்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 2 ஓட்டங்களில் வீழ்ந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டத்தை டீன் எல்கர் 4 ஓட்டங்களுடனும், ரபாடா ஓட்டங்கள் இன்றியும் தொடங்கினர். இதில் எல்கர் அதே 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அவர் புவனேஷ்வர் பந்துவீச்சில் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்து வந்த ஹசிம் ஆம்லா நிலைத்து நின்று ரன்கள் சேர்க்க, மறுமுனையில் ரபாடா 6 பவுண்டரிகள் உள்பட 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் இஷாந்த் சர்மா வீசிய 29-ஆவது ஓவரில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களை எட்டியிருந்தது.

இந்த நிலையில், ஆம்லா ஒருபுறம் மெதுவாக ஓட்டங்கள் சேகரிக்க, மறுபுறம் விரைவாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதில் டி வில்லியர்ஸை 5 ஓட்டங்களில் புவனேஷ்வர் வெளியேற்ற, கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 8 ஓட்டங்கள் எட்டியிருந்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டானார்.

மறுமுனையில் ஆம்லா 98 பந்துகளில் அரைசதம் எட்டினார். டூ பிளெஸ்ஸிஸை அடுத்து வந்த டி காக்கும் 8 ஓட்டங்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்தார்.

இந்த நிலையில் ஆம்லா 7 பவுண்டரிகள் உள்பட 61 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் பும்ரா பந்துவீச்சில் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வந்தவர்களில் பிலாண்டர் மட்டும் 5 பவுண்டரிகள் உள்பட 35 ஓட்டங்கள் சேகரித்து, முகமது ஷமி வீசிய 62-வது ஓவரில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பெலுக்வாயோ 9 ஓட்டங்களில் பும்ராவால் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார். கடைசி விக்கெட்டாக கிடி டக் ஔட் ஆனார். மோர்னே மோர்கெல் மட்டும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்கள், புவனேஷ்வர் 3 விக்கெட்கள், இஷாந்த், ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 7 ஓட்டங்களே முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.