indian player won the silver medal in world trophy gun shoot

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ஆடவர் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் ஒரு புள்ளியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். எனினும், அவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அங்குர் 74 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதே பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லட் 75 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றதோடு உலக சாதனையும் படைத்தார்.

பிரிட்டனின் ஜேம்ஸ் டெட்மான் 56 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர்.

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய அங்குர் மிட்டல்,

’புதிய விதிமுறையின் கீழ் நான் பங்கேற்ற முதல் இறுதிச் சுற்று இதுதான். எனினும் எனது ஆட்டம் சிறப்பாகவே அமைந்தது. உலகக் கோப்பையில் முதல் பதக்கத்தை வென்றிருக்கிறேன்' என்றார்.

மற்றொரு ஆட்டமான 10 மீ. கலப்பு இரட்டையர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து ஜோடி தங்கம் வென்றது.

இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 5-3 என்ற கணக்கில் ஜப்பானின் யூகாரி கொனிஷி - டோமோயூகி மட்சுடா ஜோடியைத் தோற்கடித்தது.

ஸ்லோவேனியாவின் நபாஸ்வான் - கெவின் வென்டா ஜோடிக்கு 3-ஆவது இடம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர் போட்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்டமாக நடத்தப்பட்டது.

எனவே, இந்தப் போட்டியில் வென்ற பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்படாது.