இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
310 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோதிலும் கேப்டன் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ஓட்டங்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 162 ஓவர்களில் 488 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் முரளி விஜய் 126, புஜாரா 124, அஸ்வின் 70 ஓட்டங்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் இன்னிங்ஸில் 49 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஹமீது 62, அலாஸ்டர் குக் 46 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 58.4 ஓவர்களில் 180 ஓட்டங்களை எட்டியபோது ஹமீது ஆட்டமிழந்தார். அவர் 177 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் குவித்தார். இதையடுத்து வந்த ஜோ ரூட் 4 ஓட்டங்களில் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய அலாஸ்டர் குக் 194 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 30-ஆவது சதம் இது. அதேநேரத்தில் இந்திய மண்ணில் அவர் விளாசிய 5-ஆவது சதம் இதுவாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய குக் 243 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 130 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இங்கிலாந்து. அப்போது அந்த அணி 75.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 49 ஓவர்களில் (உத்தேசமாக) 310 ஓட்டங்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரரான கௌதம் கம்பீர் ஓட்டங்கள் கணக்கைத் தொடங்காமலேயே வெளியேறினார்.
பின்னர் வந்த புஜாரா 18 ஓட்டங்களிலும், மற்றொரு தொடக்க வீரரான விஜய் 31 ஓட்டங்களிலும், அஜிங்க்ய ரஹானே 1 ஓட்டத்திலும் நடையைக் கட்ட, 23.4 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. இதனால் ஆட்டம் இங்கிலாந்து வசம் செல்வதுபோன்ற சூழல் ஏற்பட்டது.
ஆனால் 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கோலி-அஸ்வின் ஜோடி இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது. 16 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 47 ஓட்டங்கள் சேர்த்தது. அஸ்வின் 53 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ரித்திமான் சாஹா 9 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். இதனால் இந்தியா மீண்டும் ஆட்டம் கண்டது.
ஆனால் 7-ஆவது விக்கெட்டுக்கு கோலியுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா விக்கெட்டை காப்பாற்றியதோடு, வேகமாகவும் ஓட்டங்கள் சேர்த்தார். அதேநேரத்தில் கோலி நிதானமாக ஆட, போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 52.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.
கோலி 98 பந்துகளில் 49, ஜடேஜா 33 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங், பெüலிங் என இரண்டிலும் அசத்திய இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
