india bowling well in second test match

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி திணறி வருகிறது.

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் புவனேஷ்குமார், திருமணம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். அடுத்த போட்டியிலும் விளையாடமாட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமாவும் கருணரத்னேவும் களமிறங்கினர்.

சமரவிக்ரமா 13 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில், புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய திரிமன்னே 9 ரன்கள் எடுத்திருந்தபோது, அஷ்வினின் அசத்தலான பந்துவீச்சில் போல்டானார். 

மேத்யூஸ், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு முனையில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த கருணரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இலங்கை அணியின் கேப்டன் சண்டிமாலும் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி, 57 ஓவர் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.